Category Archives: முழுமதி

முழுமதி!!! – வேலணையூர் லிங்கா!

Standard

மல்லிகை மொட்டுக்களை 
வான் வெளியில் தூவியது போல்!
நட்சத்திரங்கள் நடுவானில் கொட்டிக்கிடக்க....
அழகான முகம் காட்டி
முகில் மறைவில் உடைமாற்றி..
மொழி பேச நீ மறுப்பாய்
ஒளிவீசி எமை அழைப்பாய்!

அண்ணன் சூரியனின் 
பார்வை பட்டால் மட்டும் ஓடுகிறாய்?
கண்னெதிரில் படாமல்
உன் முகத்தை மறைக்கிறாய்!
இரவுதனில் நீ வந்தால் 
உறங்கும் உள்ளங்கள் விழித்துக்கொள்ளும்!
உன் பார்வை பசுமை என்று
உறவுகளும் நினைப்பதுண்டு!
வட்ட நிலா உன் முகத்தை 
எட்ட நின்று பார்க்கையிலே!
தட்டதனில் உணவு தந்த 
தாயின் நினைவு தோன்றுதிங்கே!
முத்தமதை சுத்தம் செய்து
கூடியிருந்து  கதைஅளந்த ..
நினைவுகளும் வருகுதிங்கே!!!

கார்முகிலில் நீ மறைந்து
ஓடி ஓடி  ஒழித்தாலும்!
கற்பனைக்...கவிஞ்ஞர்கள் உன்னை 
கண்டுகொள்ளாமல் போனதில்லை!
தேய்பிறை என்பார்கள்
வளர்பிறை என்பார்கள்!
பிறை நிலா என்பார்கள்
தேன் நிலா என்பார்கள்!
உன் நிலை புரியாமல்
உலகத்து பொய் எல்லாம்
உன் பெயரில் சொல்வார்கள்!
அழகான பெண்ணைப் பார்த்து 
அழகுநிலா என்பார்கள்!
கறுப்பான பெண்ணைப்பார்த்து
அமவாசை என்பார்கள்!

என்றும் முழுமதியாய் இருக்கும் உன்னை..
குறை கூறும் மதியற்ற கவிஞ்ஞர்களே!!
உன் மதியதனில் பதியவையுங்கள்!!
என் நிலாவிற்கு உடல் ஊனம் இல்லை என்று!!!

அதிகாலை முழுமதி..! – பாரதி கணேஸ்

Standard

அதிகாலை முழுநிலவை 
காண்கிறேன்...! 
விண்ணில் அல்ல 
என் வீட்டு ஜன்னலில் 
உன் முகமாக...!

முழு சிந்தனையும் 
உன் கற்பனை
மதி முழுதும் உன் நினைவு
இப்படி முழுநேரமும் உன்னை 
முழுமையாய் யாசிக்க நினைக்கிறேன்
நீ என் வாசல் வந்து 
மடி மீது தவழ்வது எப்பொழுது? முழுமதியாக!!!

முழுமதியாக வந்துவிடு…! – அருளினி.சிவனேசன் (லண்டன்)

Standard

எத்தனை இரவுகள் 
உன்னிடம் நான் பேசியதுண்டு
அத்தனை இரவுகள் 
உன் மௌனம் தான் பேசியதுண்டு
தினம் தினம் நீ தேய்வதைக் கண்டு
என் பேதை மனம் வாடியதுண்டு
 
அடிவானம் சிவக்க 
அந்தி மாலை 
பொழுது வந்து பிறக்க
விண்மீன்கள் ஆங்காங்கே 
கண்ணைச் சிமிட்ட

சில்லென்ற தென்றலில் 
தென்னோலை சலசலக்க
மெல்ல நான் வந்து 
யன்னலை திறக்க

மரங்களுக்குள் ஒழிந்து நீ சிரிக்க
வானலையில் தவழ்ந்து வரும் 
மெல்லிசையில் நான் திழைக்க

நம் சந்திப்பில் கண்ணு வைத்து
வெண்திரைகள் உன்னை மூடி மறைக்க
உன் முகத்திரையை விலக்கி 
நீ என்னைப் பார்க்க
உன் காந்த ஒழி 
என் முகத்தில் பட்டுத் தெறிக்க

என் அகமும் முகமும் 
மலர்ந்திடுமே உன் வரவால்
 
நீ மட்டும் தேயாதே 
தேய்பிறையாக - அங்கே
நான் மட்டும் 
தனியாக வாடுகின்றேன் - இங்கே

வான் மதியாக வெகுதூரத்தில் இருக்கின்ற நீ
முழுமதியாக வந்துவிடு எனக்காக நீ...!