Category Archives: காலைச் சூரியன்

காலைச் சூரியன்…! – லக்கி

Standard

இளங்காலைப் பொழுதின்றில் 
செங்கொண்டைச் சேவல் குரலெடுத்துக் கூவ 
பறவையினம் சிறகடிக்க 
வண்டினங்கள் ரீங்கரிக்க 
குயிலினங்கள் இசைபாட 
வட்டக் கதிரவன் முகம் மலர
எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக
சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச
இதற்கு மேலும் தூங்க முடியாமல்
படுக்கையை விட்டு எழுந்ததும்
கதிரவன் தன் இளங்கதிர்களால் 
என்னை செல்லமாக வருடி வாழ்த்த
ஆதவனின் வரவிற்காய் காத்திருந்த
சூரியகாந்தியும், தாமரையும் 
கதிரவனின் செம்மஞ்சள் கதிர் பட்டு மெல்ல பூக்க..
விடிந்தது அதிகாலை
நேற்றைய காலை இறந்து போயினும் 
இன்றைய காலை நிகழ்ந்து போயினும் 
நாளையும் காலை வரும் என்னும் நம்பிக்கையுடன் 
காலையிது காலையிது  என்று
பாடிக்கொண்டே பரபரப்பாய் 
தன் பணி செய்ய கிளம்பிவிட்டான்...
Advertisements

அதிகாலைச் சூரியன்! – வேலணையூர் லிங்கா!

Standard

கோலமயில் ஆடுவதும்
கோழிகள் கூவுவதும்!!
கரும் காக்கைகள் கூடுவதும்
குயில் இனங்கள் பாடுவதும்!!
கதிரவன் வரும் நேரம் என்று
நினைவூட்டீ சொல்கின்றன!
உறக்கத்தை கலைத்துவிட்டு
உறவுகளுக்கு இரைதேட...
பறக்கும் இனங்களும்
கதிரவனின் வருகைக்காய் காத்திருக்கும்!!

தலை சாய்ந்த புதுமலர்கள்
உன் வருகைக்காய் காத்திருக்க!!
பனி மழையின் தேன் துளிகள்
புல்தரையில் பாய்விரிக்க!!!
கடல் அலையின் அலைஒலிகள்
காதோரம் இசைமீட்ட!!
தமிழ் வானொலியின் 
இறைகானம் காற்றோடு கலந்துவர!!
அதிகாலைச் சூரியனின்
அரங்கேறும் நேரம் அது.. கரும்பாக இனிக்கும் அது!!

இருட்டினை அது கிழித்து
மஞ்சள் பூசி அது குளித்து!
உயிரினங்களை அது மதித்து
கடும் சூட்டினையும் அது தணித்து!
அதிகாலையில் வந்திடுவாய்
அன்பு முத்தம் தந்திடுவாய்!!
அதிகாலைச் சூரியனின்
அழகு மிகுந்த தூரிகையால்..
வெண் மேகங்களில் 
நிறைந்திருக்கும் எண்ணற்ற ஓவியங்கள்!

விண்மீன்கள்  விலகிச்செல்ல
வெண்ணிலவும் ஒதுங்கிக்கொள்ள!!
பறவை இனங்கள் இடம் பிடிக்கும்
விமானத்தின் பாதைகள் தடம் பதிக்கும்!
அதிகாலைச் சூரியனின் அற்புத வருகையது..
அன்னையவள் நாட்டினிலே
அர்த்தமுடன் மலர்கிறது!!
அன்னியவர் நாட்டினிலே
அதிகாலை சூரியனின் வருகையது!!
அகதிகளின் வாழ்க்கைபோல்
மறுக்கப்பட்டு மறுக்கப்பட்டு மலர்கிறது!!!!

உன் பார்வையே சூரியனாய்… தயா பிரதீப்

Standard

அன்று நீ பேசிய மௌனங்கள் அது
இன்று என்னை சுட்டெரித்த உன் கோபம் அது
பாறையாய்...இருந்த என் மனதையும்
சுக்கு நுறாய்....உடைத்த பார்வை அது

சூரியன் வந்துதித்த சுவடாய் நீ
எதிபார்த்து காத்திருக்கும் வானமாய் நான்
அதிகாலை சூரியனாய் ...ஒருமுறை உதயமாகிவிடு
விடியட்டும் என் வானமது மீண்டும் 
உன் பார்வை பட்ட சூரியனாய்!!!

உதய நேரத்து காலை சூரியன் – பாரதி கணேஸ்

Standard

சேவலும் மயிலும் கூவ
அதிகாலை வேளை
மேகம் முடிய வானம்
முகம் காட்ட துடிக்கும்
நீலகடல் பரப்பில் இளன்சுரியன்

இளன்சுரியனோ
செக்கச்செவேல் என்றிருக்க
கடல் நீரோ
நீல வண்ணம் கொடிருக்க
மனதை பரவசப்படுத்தும்
உதய நேரத்து காலை சூரியன்

தொலைந்து போன மேகத்திற்காக
கரைந்து  உருவாகும் வானம்பாடி
பூக்களில் மகரந்தம் தேடிடும் ஈக்கள்
வண்ணமாய் பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சி
காலை சூரியனின் கனிந்த ஒளியிலே
அசையும் பொருள்கள் அனைத்திற்கும் உயிர் தந்து
ஓரறிவு முதல் ஆறரிவு வரை எல்லா
உயிர்களுக்கும் ஜீவாதாரம் ஆன சூரியனே
உலகிலுள்ள சகல ஜீவன்களின்
புண்ணிய பாவங்களுக்கு சாட்சியாய் இருப்பவனே
காலைசுரியனே உனக்கு என் நமஸ்க்காரம்

காலைச் சூரியன்!!! – அருளினி.சிவனேசன் (லண்டன்)

Standard

தீப்பெட்டியினை தடவி எடுத்து
குப்பி விளக்கினை ஏத்தி வைச்சு

அரிக்கன் லாம்பு தனை கையில் கொண்டு
கிணற்றில்  இரண்டு குடம் தண்ணி அள்ளி

மாட்டுத் தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கி
தொட்டுத்தடவி மாட்டுப் பாலும் கறந்து

சாணி கொண்டு மண் அடுப்பை மெழுகி
காய்ச்சிய பாலில் சுடச் சுடக் காப்பியும் போட்டு

அத்தானை எண்ணி என் கையில் எடுக்கையிலே 

தன் சிறகுகளை ஒருதரம் அடித்து

அக்கக்கா கொக்கரக்கோ
அத்தான் வந்தாரா......
கொக்கரக்கோவென்று

வேலியில் பாய்ந்த சேவலும் கூவிட

வாரிய கூந்தலை அள்ளி முடித்து
கட்டுமரம் கண்ணுக்கு தெரியுதா வென்று 

வாசலில்  நான் கால் வைக்கயிலே

வெள்ளிக் கதிர்களை அள்ளி வீசி
வெண்பஞ்சுக்குள் ஒளிந்து நின்று  

தன் மஞ்சள் முகம் தனைக் காட்டி
வானம்  அதில் அவன் எழுந்துவர 

கரை ஏறிடுவார்....... என் அத்தான்
காலைச் சூரியனின் துணை கொண்டு!!!!